Disclaimer: This piece is presented in both Tamil and English. The Tamil version is the original text. The English translation follows the same structure and meaning for accessibility to non Tamil readers. Kindly Scroll down.
பகுத்தறிவு
பகுத்தறிவு என்பது மதத்தை எதிர்ப்பதற்கான கோஷமல்ல, கடவுளை மறுப்பதற்கான முழக்கமல்ல. அது முதலில் மனித மனம் உலகத்தை எதிர்கொள்ளும் விதம். ஒரு கருத்து பழமையானது என்பதற்காகவும், ஒரு நடைமுறை பெரும்பான்மையால் பின்பற்றப்படுகிறது என்பதற்காகவும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலைதான் பகுத்தறிவு. இது எதிர்ப்பின் அரசியல் அல்ல, சிந்தனையின் ஒழுக்கம்.
தமிழ் சிந்தனை மரபு பகுத்தறிவற்றதல்ல. நம் இலக்கியங்களின் அடித்தளத்தில் கேள்வி இருக்கிறது, காரணம் இருக்கிறது, பொறுப்பு இருக்கிறது. திருவள்ளுவர் எங்கும் கண்ணை மூடிக் கொண்டு நம்பச் சொல்லவில்லை. “எண்ணித் துணிக கருமம்” என்பது ஒழுக்கம் பற்றிய பாடல் அல்ல, அது செயலை முன்னிட்டு சிந்திக்கச் சொல்லும் அறிவுச் சாசனம். காரணம் அறியாமல் செயல் புரிதல் அறமல்ல என்ற எண்ணமே அதில் அடங்கியுள்ளது.
காலப்போக்கில் சிந்தனையை விடச் சடங்குகள் மேலோங்கின. ஒரு கருத்து பழமையானது என்பதற்காக உண்மையாகவும், பெரும்பான்மையால் பின்பற்றப்படுகிறது என்பதற்காக நியாயமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விளக்கம் தேவையற்றதாக மாறியது. துன்பம் அனுபவிக்கப்பட வேண்டும், அநீதி ஏற்கப்பட வேண்டும், அதிகாரம் கேள்வியின்றி ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணங்கள் விதியென்று போதிக்கப்பட்டன. இப்படியான சூழலில் மனிதர்கள் சிந்திக்க பயிற்சி பெறுவதில்லை, கீழ்ப்படிதலுக்கே பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சிந்தனை நீக்கப்பட்ட இடத்தில் அதிகாரத்திற்கு விளக்கம் தேவையில்லை, பயமே போதுமானது. பகுத்தறிவு இந்த கட்டமைப்புகளை குலைக்கிறது, ஏனெனில் அது பயத்தை அகற்றுகிறது. “ஏன்” என்ற ஒரு கேள்வி எழும்பினாலே, அடக்குமுறைகள் அசையத் தொடங்குகின்றன.
இங்கே இருந்து தான் "நாத்திகம்" உருவாகிறது. அது கூச்சலாகப் பிறப்பதில்லை. அது கவனிப்பிலிருந்து வருகிறது. சடங்குகள் காரணமின்றி கட்டாயப்படுத்தப்படும்போது, ஒழுக்கம் மனச்சாட்சியிலிருந்து நீக்கப்படும்போது, சமத்துவமின்மை தெய்வீகமாக்கப்படும்போது, சிந்திக்கும் மனம் மெதுவாக விலகுகிறது. அது மறுப்பை அறிவிப்பதில்லை ஆனால் ஒத்துழைப்பை நிறுத்துகிறது.
பகுத்தறிவு இல்லாமையின் விளைவுகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. அறிவியலுக்கு மாற்றாக மூடநம்பிக்கை வருகிறது. பண்டையது என்பதற்காக பொய்யும் உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மருத்துவ முடிவுகள் தள்ளிப் போடப்படுகின்றன. சமூக அநீதி புனிதமாக்கப்படுகிறது. அமைப்புகளைப் பார்ப்பதற்குப் பதிலாக விதியையே குற்றம் சாட்டுகிறோம். இங்கே பொறுப்பு மறைந்து, வேதனை இயல்பாக மாறுகிறது.
பகுத்தறிவு ஆறுதலை அளிப்பதில்லை. அதனால்தான் அது எதிர்க்கப்படுகிறது. அது எளிய பதில்களை நீக்குகிறது, நிச்சயமின்மையை முன்வைக்கிறது. அது காரணங்களைச் சொல்வதில்லை, பொறுப்பைத் தருகிறது. நம்பிக்கை பாதுகாப்பாக உணரப்படுகிறது, ஏனெனில் பதில்கள் முன்கூட்டியே எழுதப்பட்டிருக்கின்றன. சிந்தனை அப்படியல்ல, அது துணிச்சலைக் கோருகிறது.
பகுத்தறிவு நம்பிக்கையை அழிப்பதில்லை. அது அதை ஒழுங்குபடுத்துகிறது. நம்பிக்கை தனிப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அது பிறரை ஆளக்கூடாது. ஆன்மிகம் இருக்கலாம். ஆனால் அதற்காக தர்க்கம் நிறுத்தப்படக்கூடாது. ஒழுக்கம் பயத்திலிருந்து பிறப்பதல்ல. மனிதத்தன்மையிலிருந்து உருவாக வேண்டும். ஆபத்து நம்பிக்கையில் இல்லை. சிந்திக்காத நம்பிக்கையில்தான் உள்ளது. பகுத்தறிவை மறுக்கும் சமுதாயம் குடிமக்களை உருவாக்காது. அடிமைகளை உருவாக்கும். அங்கே ஞானம் வளராது. கீழ்ப்படிதலே வளர்க்கப்படும்.
பகுத்தறிவு என்பது கலாச்சாரத்தை இழப்பதல்ல. அதை தேர்ந்தெடுப்பது. அர்த்தமுள்ளதை பழக்கத்திலிருந்து பிரிப்பதும். மனிதத்தன்மையை படிநிலைகளிலிருந்து விடுவிப்பதும் அதன் பணியே. பகுத்தறிவு இல்லாத முன்னேற்றம் தற்செயலானது. அதனுடன் இருக்கும் முன்னேற்றம் நோக்கத்துடன் உருவாகிறது.
பகுத்தறிவு ஒன்றையே கேட்கிறது. ஏற்றுக்கொள்ளும் முன் புரிந்து கொள்ளுங்கள். அதுவே ஒரு சமுதாயத்தின் மூச்சை மாற்றக்கூடியது.
Rationalism
Rationalism is not a slogan meant to oppose religion, nor a chant meant to deny God. It is, first, the way the human mind confronts the world. It is the state of mind that refuses to accept something as it is, merely because an idea is ancient or a practice is followed by the majority. This is not the politics of opposition, but the discipline of thought.
The Tamil intellectual tradition is not without rationalism. At the foundation of our literature, there is questioning, there is reason and there is responsibility. Thiruvalluvar never asked anyone to believe with closed eyes. “எண்ணித் துணிக கருமம்” Translates to "Think and then act” is not a verse only about morality. It is a declaration of knowledge that asks one to think before acting. Within it lies the idea that acting without understanding is not virtue.
Over time, rituals rose above thought. An idea was accepted as truth merely because it was ancient, and a practice was considered just because it was followed by the majority. Explanation became unnecessary. Suffering was taught to be endured, injustice to be accepted, and authority to be agreed to without question, all in the name of destiny. In such conditions, people are not trained to think but are conditioned for obedience. Where thinking is removed, authority does not require justification. Fear alone is sufficient. Rationalism dismantles these structures because it removes fear. The moment the question “why” arises, systems of oppression begin to shift.
From here is where "Atheism" emerges. It is not born as a voice. It comes from observation. When rituals are enforced without reason, when morality is removed from conscience, and when inequality is divinized, the thinking mind slowly opts out. It does not declare rejection, but it stops cooperating.
The effects of the absence of rationalism are all around us. Superstition comes in place of science. Falsehood is accepted as truth because it is ancient. Medical decisions are postponed. Social injustice is sanctified. Instead of examining systems, fate itself is blamed. Here responsibility disappears and suffering becomes normal.
Rationalism does not provide comfort. That is why it is opposed. It removes simple answers and places uncertainty in front of us. It does not give reasons. It gives responsibility. Faith feels safe because answers are already written. Thought is not like that. It demands courage.
Rationalism does not destroy belief. It disciplines it. Belief may be personal, but it must not rule over others. Spirituality may exist, but logic must not be stopped. Morality should be formed not by fear, but by humanity. Danger is not in belief. It lies in unthinking belief. A society that rejects rationalism does not create citizens. It creates slaves. There wisdom does not grow instead slavery does.
Rationalism is not the loss of culture. It is the act of choosing it. Separating what is meaningful from habit, and freeing humanity from hierarchy is its task. Progress without rationalism is accidental. Progress with it is formed with intention.
Rationalism asks for only one thing. Understand before accepting. That alone can change the breath of a society.
No comments:
Post a Comment